சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார்.
ஆதியே துணை,
ஓம் நமசிவய
சிவாய நம ஓம்
சிவ வாக்கியர் :
இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகள் யாவும்
""குவா,குவா" என்று உ, அ, என்ற
எட்டிரண்டு மந்திரத்தையே, முதன்முதலாக
ஒலித்து அழும். ஆனால் இவர் பிறக்கும்
போது"சிவா, சிவா" என அழுகுரலோடு
அலறியதால், சிவவாக்கியர் எனப் புகழப் பெற்றார். பிறந்ததிலிருந்தே சிவ நாமம் உச்சரித்து, சிவ
சிந்தையோடு வாழ்ந்து சித்தராகவே வளர்ந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்து
வளர்ந்தவராயினும் ஜனித்த போதே சித்தராக உருவாகியதால், இயற்கையாகவே
இறைவழி பாடுகள் செய்து அவரின் கடமைகளை ஈசனிடம் விட்டு விட்டு, ஆன்மீக
தேடுதல் நாட்டம் கொண்டு அலைந்தார்.இவ்விதம் ஏற்பட்ட இறை நாட்டத்தினால் நான்கு
வேதங்கள், சாஸ்திரங்கள், இதிகாசங் கள், புராணங்கள்
மற்றும் பல நன்னூல்கள் யாவையும் கசடற கற்றறிந்தார். ஆதலால் ஞானதாகம் ஏற்பட்டு
பற்பல இடங்களுக்கு அலைந்து ஞான குருவைத் தேடினார். இவரின் இயல்பான கேள்வி
ஞானத்திற்கு தக்க பதிலைக் கூறும் மெய் குருவைத் தேடிக் கொண்டே இருந்தார். இவரின்
ஞானக் கேள்விகளுக்கு பதில் சொல்ல எந்த குருக்களாலும் இயலவில்லை. ஆதலால் மெய்ஞான
குருவை அடைவதே இலட்சியமாகக் கொண்டு, ஊர் ஊராக, கோயில்
கோயிலாக, காடு, மலைகளில்
எல்லாம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்.