Thursday, May 30, 2013

சிவவாக்கியம் (131-140)

சிவவாக்கியம் (131-140)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-131

சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!


ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-132

காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே!!!

காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும் நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா? அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.
******************************************* 

சிவவாக்கியம்-133

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ 
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!!!

எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா இருக்கின்றது? இங்கொன்றும் அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா? அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா, எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.

******************************************* 

சிவவாக்கியம்-134

அறையறை இடைக்கிடந்த அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீற்குளித்தால் அன்று தூமை என்கிறீர்
போரை இலாத நீசரோடும் போருந்துமாறது எங்னே.

இளம்பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் அறையில் ஒதுக்கி வைப்பது ஏன் என்றால் அவள் தீட்டு என்று சொல்கின்றார்கள். பத்து மாதம் கருவிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் தீட்டு என்கிறார்கள். இறந்த சாவுக்குப் போய்விட்டு குளத்தின் துறைகளில் குளிக்கும் காரணம் கேட்டால் அதற்கும் தீட்டு என்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் தீட்டு எனும் பொறுமை இல்லாத நீசர்கலோடும் நீ தீட்டாகவே பொருந்தி இருப்பது எவ்வாறு இறைவா?
******************************************* 

சிவவாக்கியம்-135

சுத்தம் வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகிய நீரிலே தவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது சுட்டதேது தூய்மை கண்டு நின்றது ஏது?
பித்தர் காயம் உற்றதேது பேதம் ஏது போதமே.

சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி  அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!! நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம். சுத்தம் ஏது? தீயாக சுட்டது ஏது? என்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-136

மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா!!

மாதம்தோறும் பெண்களுக்கு இயற்கையாய் வரும் தூமையே அவள் தூய்மையானவள் என்பதற்கு சான்று. அது நின்று போனால் அவள் கருவைத் தான்கியிருக்கின்றால் என்பதே காரணம். அத்தீட்டில் கலந்தே உடலும் உயிரும் வரர்ந்து உருவமாகி ஜனிக்கின்றது. நாதமும் விந்துவும் கலந்தே உயிர்கள் யாவும் உண்டானது. இதில் நாதம் எது? வேதம் எது? நற்குலங்கள் எது? எல்லாம் அத்தூயமையில் இருந்தே தோன்றியுள்ளது என்பதனை அறியாமல் வேதங்களை வெறும் வாயால் ஓதுவதால் மட்டும் உயர்ந்த குளம் எனப் பேசும் வேதியரே! நீங்கள் இப்போவியில் இவை இல்லாமல்தானோ விளைந்தீர்களா? அது எப்படி எனக் கூறுங்கள்!!!
******************************************* 

சிவவாக்கியம்-137

தூமை அற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது
ஆண்மை அற்று நின்றலோ வழக்கமற்று நின்றது
தான்மைஅற்று ஆண்மை அற்று சஞ்சலங்கள் அற்று நின்ற
தூமை தூமை அற்ற காலம் சொல்லும் அற்று நின்றதே!!!

பெண்ணிடம் தூமை என்ற மாதவிலக்கு நின்ற பிறகுதான் அங்கெ கருவாகி, ஆண், பெண், அலி என்ற தன்மையற்ற பிண்டமாக உயிர் நிற்கின்றது. அதன் பின் அப்பிண்டம் சிசுவாகி கருவறையில் வளர்ந்து குழந்தையாக வெளிவருகிறது. அது வளர்ந்து வாழ்கையில் அடையும் இன்ப துன்பங்களை பெற்று தான் என்ற ஆணவத்தால் பல சஞ்சலங்களை அடைந்து மரணம் அடைகிறது. அத்தூமையால் ஆனா உடம்பில் உயிர் போன பின் பிணம் என்ற பேர் பெற்றது, தூமை அற்றதால் என்பதனை அறியுங்கள். ஆகவே தீட்டில்லாத உடம்பு சவமே!!!
******************************************* 

சிவவாக்கியம்-138

ஊறி நின்ற தூமையை உறைந்து நின்ற சீவனை
வேறு பேசி மூடரே விளந்தவாறது ஏதடா
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன 
சீறுகின்ற மூடனே அத்தூமை நின்ற கோலமே!!!

தாயின் கருவறையில் சுக்கில சுரோனித கலப்பால் தூமையில் ஊறி நின்று உருவான உயிர் மனித குலத்திற்கு பொதுவாக அமைந்துள்ளது அறியாமல் நீ வேறு குலம் நான் வேறு குலம் என்று வேறுபடுத்திப் பேசுகின்ற முட்டாள்களே! அதனால் நீங்கள் அடைந்த பலன் என்ன? நாற்றம் வீசும் தூமையில் பிறந்தவர்கல்தால் மனிதனில் ஞானியராகவும், சித்தர்களாகவும், நற்குலங்களலாகவும் உள்ளார்கள். இதை உணராது கோபப்படும் முட்டாள்களே! அத்தூமையில் பரிசுத்தனாய் நின்ற ஈசனின் களத்தை கண்டுணர்ந்து ஒன்றி தியானம் செய்யுங்கள்.

******************************************* 

சிவவாக்கியம்-139

தூமை கண்டு நின்ற பெண்ணின் தூமை தானும் ஊறியே
சீமை எங்கும் ஆணும் பெண்ணும் சேர்ந்து உலகம் கண்டதே
தூமை தானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமை அற்று கொண்டிருந்த தேசம் ஏது தேசம்?

தீட்டு நின்ற பெண்ணின் தீட்டில் ஊறி வளர்ந்த உயிரே ஊர்கள் எங்கும் ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து வாழ்ந்து வருவதை இவ்வுலகம் முழுமையும் காண்கின்றோம். காம ஆசையால் தீட்டில் தோன்றி உருவாக்கி நின்ற தன்னை அறிந்தவர்கள் எல்லா ஆசைகளையும் துறந்து இவ்வுலகில் சிவனையே தியானித்து இருப்பார்கள். இருக்கும் அனைத்து சீவனிலும் தீட்டு இல்லாமல் இருக்கும் தேசம் எங்காவது உள்ளதா?
******************************************* 

சிவவாக்கியம்-140

வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர்
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும் என்ற அப்பொருள் விரைந்து கானல் ஆகுமே!!

உலகில் பிறப்பெடுத்த மனிதர்கள் இறைநிலை அடைவதற்கும், எட்டு சித்திகளை பெறுதற்கும், பிறவிப் பிணிமுதல் வரும் பிணிகள் யாவையும் நீக்குவதற்கும், பொன் செய்யும் வித்தைகள் செவதற்கும், மெய்ப்பொருள் கிடைக்கவேண்டும். அது கிடைத்தால் எல்லாம் செய்து வளமோடு வாழலாம் என்று வீனாசைக் கொண்டு பல இடங்களிலும் அலைந்து தேடுகிறார்கள். அது வேணும் என்று எங்கு சென்று தேடினாலும் கிடைக்காது. உனக்குள்ளே உள்ளதாகவும்,இல்லாததாகவும் இருப்பதை அறிந்து கொண்டு வேண்டும் என்ற ஆசைகள் யாவையும் துறந்து தியானம் செய்யுங்கள். உண்மையான யோக ஞான சாதனங்கள் வேண்டும் என்ற அந்த மெய்ப்பொருள் கிடைக்கப் பெற்று விரைவில் சோதியான ஈசனை காண்பீர்கள் !!!
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

3 comments:

  1. அருமை.
    ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்

    ReplyDelete
  2. நன்றி விளக்கம் அருமை

    ReplyDelete
  3. 137 வது பாடலில் உடல் தீட்டால் ஆனது என்றால் , தீட்டற்றது உடலை விட்டு வெளியேறிய உயிர் என்பது தானே சரியாக இருக்கும்? அப்டியானால் உயிர் தான் தீட்டா

    ReplyDelete