Friday, June 14, 2013

சிவவாக்கியம் (161-170)

சிவவாக்கியம் (161-170)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-161 

அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பதும்
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டதும்
மிக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவதும்
ஒக்கிடில் உமக்கு நான் உணர்த்து வித்தது உண்மையே!



(அக்கிடீர்=நீரும், நெருப்பும்) ஆதியாக உள்ள மெய்ப்பொருளே அனைத்து உயிர்களிலும் நீராகவும், நெருப்பாகவும் இருக்கின்றது. அதுவே உங்களிடம் அறிவு, உணர்வு, மனம் என்று மூன்றாக தரித்து முப்பொருளாய் உணராது இப்பூமியில் பிறந்து இறந்து பிறந்து மாண்டு போகிறார்கள். ஆகவே மெய்ப்பொருளை அறிந்து அதையே ஒத்து தியானம் செய்வதுவே இப்பிறவித் தளையிலிருந்து ஆன்மா விடுதலை அடைவதற்கான வழி என நான் உங்களுக்கு உணர்த்துவிக்கும் உண்மையாகும்.

******************************************* 

சிவவாக்கியம்-162 

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙகனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்
வையத்தில் மாந்தரோடு வாய் திறப்பது இல்லையே!

ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்
கனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.
******************************************* 

சிவவாக்கியம்-163
 
நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வு யவ்வுளும் சிறந்த வன்மை ஞான போதகம்
ஒவ்வு சுத்தியுள் நிறைந்து உச்சியூடுருவியே      
இவ்வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே!

அஞ்செழுத்தில் 'ந' என்ற சுவாதிட்டானத்தையும், 'ம' என்ற மணிப்பூரகத்தையும் கடந்து அனாகத்தில் உள்ள 'சி' யின் மேல் இருக்கும் விசுத்தியில் 'வ'வும் ஆ
ஞ்ஞாவில் 'ய' வும் ஓதி உணரவேண்டும். இந்த நமசிவய என்ற அஞ்செழுத்து நம் உடம்பில் மண், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களாக இருப்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். மூலாதாரத்தில் 'ஓம்' என்ற அட்சரத்தால் குண்டலினி சக்தியை, வாசியால் மேலேற்றி நினைவால் "ஓம் நமசிவய" என்று ஓதி ஒவ்வொரு சக்கரத்திலும் அதற்குறிய  எழுத்தை நிறுத்தி அப்பியாசித்து வரவேண்டும். தூலத்தில் "ஓம் நமசிவய" எனும் இந்த பஞ்சாட்சரமே உள்ளே சூட்சுமமாகவும் எல்லா வல்லமையும் உள்ள சிறந்த ஞான போதப் பொருளாக இருக்கிறது. அதுவே உச்சியில் உள்ள மெய்ப் பொருள். இதற்குள் ஈசன் சோதியாக இருப்பதை உணர்ந்து "சிவயநம ஓம்" என்ற பஞ்சாட்சரத்தை அங்கு நிறுத்தி தியானிக்க வேண்டும். இப்படி மூலாதாரத்தில்  இருந்து உச்சி வரை முதுகுத்தண்டின் வழியாக ஊடுருவி வாசியை மெய்ப் பொருளில் உள்ள சோதியில் சேர்க்கவேண்டும். "ஓம் நமசிவய" என்ற பஞ்சாட்சரமே நம் உடம்பில் தூலமாகவும், உயிரில் சூட்சுமமாகவும் இருப்பதை அறிந்து இந்த யோக ஞானத்தை உணர்ந்து தவம் புரிபவர்கள் ஈசனாகவே ஆவார்கள்!! இது அந்த பஞ்சாட்சரமாக விளங்கும் ஈசன் மீது ஆணை.
******************************************* 

சிவவாக்கியம்-164 

அக்கரம் அன்னதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தர்க்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு அனாதியோ!

அட்சரங்களாக இருக்கும் மந்திரங்கள், ஆன்மா எனும் உயிர், உலகத்தில் உள்ள பஞ்சபூதங்கள், உடலில் உள்ள ஐம்புலன்கள், தத்துவங்களை அலசி ஆராய்ந்து இயற்றிய நூல்கள், வேத சாஸ்திரங்கள் ஆகியவைகள் யாவும் அனாதியாக என்றும், எங்கும், எப்போதும் இருப்பது. இவற்றின் அனைத்து நுட்பங்களும் நமக்குள்ளேயே தற்பரமாக விளங்கும் ச
ற்குருவான ஈசனே அநாதி என்பதனை அறிந்து தியானியுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-165
 
பார்த்ததேது பார்த்திடில் பார்வையூடழிந்திடும்
கூர்த்ததாய் இருப்பிரேல் குறிப்பில் அச்சிவம் அதாம்
பார்த்த பார்த்த போதெலாம் பார்வையும் இகந்துநீர்
பூத்த பூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே!

எல்லாவற்றையும் பார்த்தது எது என்பதை அறிந்து, அதையே பார்த்து தியானிக்க பார்வை ஒடுங்கி, அகக்கண் திறந்திடும். அதையே குறியாகக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து சுழுமுனையில் கூர்மையான நினைவை குவித்திருந்தால் சோதியைக் காணலாம். அதுவே சிவம் ஆகும். ஆகவே தியானம் செய்யும் போதெல்லாம் பார்ப்பானையே பார்த்திரு. அதை விடுத்து நினைவை பல இடங்களில் வைத்து, பார்வையை பலவிதங்களில் செலுத்தி தியானத்தை இகழ்ந்து மறந்தால் நீங்கள் மீண்டும் பூத்த பூவும் காயுமாய் பிறப்பிறப்பில் உழலுவீர்.
******************************************* 
சிவவாக்கியம்-166

நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினைப்
பற்றி ஒற்றி நின்று நின்று பற்றறுத்து என்பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே!

நெற்றியைப் பற்றி உழன்று கொண்டிருக்கின்ற ஒரு நீல நிறம் உடைய விளக்கை குறு தொட்டுக் காட்ட உணர்ந்து கொள்ளுங்கள். பின் அதையே பற்றி அறிவு, உணர்வு,  நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கி நின்று தியானிக்க உலகப் பற்றுக்கள் யாவும் நீங்கும். அதனால் அநேக பலன்கள் கிடைக்கும். அதுவே இறைவனை அடையும் வழி என்பதை அறிந்து அந்நீல   விளக்கையே உற்று நோக்கி தியானிக்க உ
ள்வெளிக்குள் பரம்பொருள் ஒளி பொருந்திய சோதியாக ஒளிறும் . அதுவே ஈசன் அமர்ந்திருக்கும் இடம் என்பதை அறிந்து தவம் புரிபவர்கள் என்றும் அனாதியாக உள்ள ஈசனை அடைவார்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-167
 
நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்

வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள்.  இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து 'சிவயநம' என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.

******************************************* 

சிவவாக்கியம்-168
 
நெற்றியில் தியங்குகின்ற நீலமா விளக்கினை
உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த சோதியை
பத்தியில் தொடர்ந்தவர் பராமயம் அதானவர்
அத்தளத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே!!!

விளக்கில் எரியும் தீபத்தை உற்றுப் பார்த்தால் அதன் நடுவில் நீல நிறம் பொருந்திய ஒளி வீசுவதை உணரலாம். அதுபோல நமது நெற்றியில் இயங்கிக் கொண்டிருக்கின்ற நீல நிறமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஆன்மாவை அறிந்து கொள்ளுங்கள். அதுவே இப்பிறவி உய்யும்
வழி என உணர்ந்து அதன் உள்ளேயே அருட்பெருஞ் ஜோதியாகி விளங்கும் ஈசனைத் தியானித்துப் பாருங்கள். அவரே அனைத்திற்கும் நாதன் என்பதை உணர்ந்து, பக்தியால் பாடியும், ஆடியும் கண்ணீர்விட்டு கசிந்து தொடர்ந்து தியானியுங்கள். நீங்களே அப்பறம்போருளாக ஆவீர்கள். அதிலேயே இருந்து தியானமும் தவமும் செய்பவர்கள் எனக்கும் குருநாதன் அவார்கள். 
******************************************* 

சிவவாக்கியம்-169
 
கருத்தரிக்கும் முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கும் முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்
அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்!!!

தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடன் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்த கொண்டு 'சிவயநம' என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-170
 
கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் த
ரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு 'சிவயநம' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.

*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment