Monday, June 17, 2013

சிவவாக்கியம் (201-210)

சிவவாக்கியம் (201-210)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-201

பூவும் நீரும் என்மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினாய்
மேவுகின்ற ஐவரும் விலங்கு தூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே!!!


பூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து என் உடலிலும் இவ்வுலகங்கள் யாவிலும் நிறைந்து நின்றுள்ளது. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவி ஐம்புலங்களாக மணமாகவும், சோதியாகவும் விளங்கி ஆட்டுவிக்கின்ற ஈசன் எனக்குள் நடராஜனாக இரவு பகல் இல்லாது  எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றான். அவனை இராப்பகல் இல்லா இடத்தே கண்டுகொண்டு தியானம் செய்யுங்கள்.  

******************************************* 
சிவவாக்கியம்-202 
 
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில்  என் மறக்கில் என் நினந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!!


ஈஸ்வரா! நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து, உன்னைக் கலந்து இவ்வுடம்பைப் பெற்றேன்.
என் உடலில் உருவாக நின்ற என்னை என்னிலே இருந்து, என்னிலே மறந்து, என்னிலே நினைந்து, என்னிலே அறிந்து கொண்டேன். உன் உருவை அறிந்து என் உடல் பொருள் ஆவியை உன்னிடம் ஒப்படைத்து என் ஊண் உருகி, உயிர் உருகி தியானித்து உன்னுடன் கலக்கும் போது, நீயும் நானும் ஒன்றாகி நிற்பதை உணர்ந்து கொண்டேன். உன் திருவருளால் ஞானம் பெற்று தவம் செய்யும் போது, சிவமே உண்மை என்பதை தெளிந்து கொண்டேன்.  
******************************************* 
சிவவாக்கியம்-203

சிவாயம் அ
ஞ்செழுத்திலே தெளிந்து தேவர் ஆகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து வானம் ஆகலாம்
சிவாயம் அ
ஞ்செழுத்திலே தெளிந்து கொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளும் உண்மையே!!!!

சிவயநம எனும் அஞ்செழுத்து மந்திரத்தின் உட்பொருளை உணர்ந்து ஓதி செபிப்பவர்கள் தேவர்கள் ஆவார்கள். சிவாயம் என்ற அஞ்செழுத்துக்குள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானித்து தெளிந்து கண்டு கொண்ட வான் பற்றி நின்ற மெய்ப்பொருளை அறிவார்கள். சிவயநம எனும் அஞ்செழுத்துகுள்ளே ஓரெழுத்தை உணர்ந்து தியானித்து தெளிந்து, கண்டு கொண்ட நான் பற்றி நின்ற மெய்ப்பொருளை அறிவார்கள். சிவயநம எனும் அஞ்செழுத்துக்குள்ளே அனைத்தும் அடங்கியிருக்கும் உண்மைகள் யாவையும் தெளிந்து, தெரிந்துகொண்டு தியானம் செய்து சிவத்தை சேர்வார்கள். 

******************************************* 
சிவவாக்கியம்-204  
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம் வீசுமாறு போல்
இச்சடமும்  இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே
அக்குடம்  சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே!!

பொய்க் குடமாகிய மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் அமைந்து மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாக நீரினால் அமைந்தே அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடம்பில் மெய்ப் பொருளாக சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றது. சிவம் போனால் சவமே!!
******************************************* 
சிவவாக்கியம்-205 
பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை
பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா
திட்டவும் படாதடா சீவனை விடாதடா
கட்டடா நீ சிக்கெனக் களவறிந்த கள்வனை.

பட்டத்தைபோன்று உயிர் பறந்து கொண்டும், கயற்றினைப் போல் உடம்பு இருந்து கொண்டும் அதனை இயக்கும் ஈசனால் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. பட்டம் அந்தரத்தில் பறப்பது போல உன் அரங்கத்தில் உயிர் பறந்து கொண்டு இருக்கிறது. அதில் மூச்சானது நூல் கயிற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கின்றது. பார்ப்பானாகிய ஈசனை உன் பார்வையால் பார்த்து மூச்சுக் காற்றை கும்பகத்தால் நிறுத்தி படுமுடுச்சு போட வேண்டும். யோக ஞான சாதகத்தால் பூராக, கும்ப, ரேசகம் செய்து வாசியைப் பிடிக்கத் தெரியாமல் யாரையும் மனம் நோக வையாதீர்கள். சீவனாகிய உயிரையும், உடம்பையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தியானத்தைக் கடைப்பிடித்து உயிரின் உண்மையை உணர்ந்து அதில் உறையும் இறைவனை சிக்கெனப் பிடித்து அனைத்தையும் அறிந்த உள்ளங்கவர்ந்த கள்வனான ஈசனை அன்பினால் கட்டுங்கள்.  

******************************************* 
சிவவாக்கியம்-206

அல்லிறந்து பகலிறந்து அகம் பிரமம் இறந்து போய்
அண்டரண்டமும்  கடந்த அனேகனேகா ரூபமாய்
சொல்லிறந்து மனமிறந்த சுக சொரூப உண்மையைச்
சொல்லியா
என்னில் வேறு துணைவரில்லை ஆனதே!!

அல்லும் பகலும் அணுதினமும் அவனையே  நினைந்து அகமும் பிரமமும் ஒன்றி இணைந்து தவம புரியுங்கள். அண்டரண்டங்கள் அனைத்தையும் இவ்வுலகம் யாவிலும் விளங்கும் ஆன்மா ஒன்றே என்பதை உணருங்கள். அறிவையும் உணர்வையும் நினைவையும் ஒன்றிணைத்து மெய்ப் பொருளையே தியானிக்க மௌனம் எனும் சொல்லும், மனமும் இறந்த சுகம் கிடைத்து சமாதி என்ற பேரின்ப நிலையில் ஈசன் சொரூபத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். இப்படி அவன் அருளால் நான் அனுபவித்த சுகத்தை வெளியில் ஒருவரிடம் சொல்லியாற அனுபவித்தறிந்தஉன்னைத்தவிர எனக்கு வேறு நண்பர்கள் இல்லை.

******************************************* 
சிவவாக்கியம்-207

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமைதான்
கைய்ரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கி ராசா கந்தமும்
துய்ய காயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே!!!

பத்து மாத காலங்கள் தாயின் கருவறையில் அடங்கி நின்ற தீட்டினால் உயிர் வளர்ந்து, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடம்பு திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கும் காதுகளும் ரசமாகிய சுவை உணர வாயும், கந்தமாகிய நாற்றம் உணர மூக்கும் தோன்றி சுத்தமான உடம்பு ஆனதும்  உலகோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானதே என்பதே உண்மை.
******************************************* 
சிவவாக்கியம்-208 

 
அங்கலிங்க பீடமும் அசவை மூன்று எழுத்தினும்
சங்கு சக்கரத்திலும் சகல வானகத்திலும்
பங்கு கொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும்
சங்க நாத ஓசையும் சிவாயம் அல்லது இல்லையே!!!

நம் அங்கத்தில் சூட்சமாக இலிங்க பீடமாக இருப்பதும் அசபை மந்திரம் எனும் "அ, உ, ம்" என்ற மூன்று எழுத்தாக இருப்பதும், சங்கு சக்கரங்களாகவும், சகல சராசரங்கலாகவும் இருப்பதும் மெய்ப்பொருளான சிவமே. இதனை அறிந்து ஆகாயமான தன் மனத்தில் ஈசனையே நினைந்து வாசியோகம் செய்யும் யோகிகள் பத்தாவது வாசல் எனும் பரமபத வாசலில் நாத ஓசையை சேர்த்து பரமனைக் கண்டு ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி தியானத்தில் இருப்பார்கள்.

******************************************* 
சிவவாக்கியம்-209 

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்சழுத்தி அவ்வெழுத்தறிந்த பின்
அஞ்செழுத்தும் அ
வ்வின் வண்ணம் ஆனதே சிவாயமே!!!

அஞ்செழுத்து பஞ்சாட்சரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து அதனை ஓதி, உச்சரிக்கும் அன்பர்களே!!! நீங்கள் காண்கின்ற அந்த மெய்ப்பொருள் அஞ்
செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. அஞ்செழுத்தின் அனைத்து உட்பொருளை யாவும் அறிந்து அதனை உடம்பில் நெஞ்செழுத்தாக இருக்கும் சிகாரத்தில் இருந்து 'சிவயநம' என்று உள்ளத்தில் இருத்தி தியானியுங்கள். அப்போது பிரமம் ஒரேழுத்தாகவும், உயிராகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரேழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வேழுத்தே பஞ்சாட்சரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து அஞ்செழுத்தை உள்ளத்திலே ஓதி மெய்ப்பொருளை சேர்ந்து தியானம் செய்யுங்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-210

ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும்
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ

சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே!!! 
 
காலந்தோறும் சொல்லிவந்த மந்திரங்கள் அமைந்துள்ள ஆகம நெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்து வரும் போது மனைவி, மக்கள், உறவுகள், நட்புக்கள் என அனைத்தையும் மறக்கும் படியாக ஒரு நொடியில் மயக்க வந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது? உடலில் உலாவிய உயிர் எங்கு போனது? ஆன்மா உடலிலேயே ஒளிந்து கொன்
தா? அல்லது அதுவே எங்குமான ஆகாயத்தில் போய் நின்றதா? ஆன்மாவில் சோதியாக துலங்கிய ஈசன் உடம்பை விட்டு எங்கு சென்று ஒளிந்து கொண்டான்? சோதி அப்போது இருக்கும் இடம் எங்கு என்பதை யாவும் சுவாமியாக வருபவர்கள் சொல்லி இறவா நிலை பெற உபதேசிக்க வேண்டும்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

2 comments:

  1. i want the above songs with the pathavurai in the form of books. IF Books are published send me the details to the following no 9443585965
    M.PANNEERSELVAM THANJHAVUR

    ReplyDelete
  2. I SEND MONEY FOR THE ABOVE BOOKS.PLEASE INFORM ME

    ReplyDelete