Saturday, June 15, 2013

சிவவாக்கியம் (181-190)

சிவவாக்கியம் (181-190)


சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-181 

தானிருந்து மூல அங்கி தணல் எழுப்பி வாயுவால்
தேனிருந்து அறை திறந்து தித்தி ஒன்று ஒத்தவே
வானிருந்து மதிய மூன்று மண்டலம் புகுந்த பின்
ஊனிருந் தளவு கொண்ட யோகி நல்ல யோகியே!!  


யோக ஞான சாதகத்தால் உடம்பில் உள்ள மூலாதாரத்தில் தீயாக இருக்கும் குண்டலினியை அங்கிருக்கும் தனஞ்செயன் என்ற பத்தாவது வாயுவால் வாசியை மேலே எழுப்பி கபாலத்தில் உள்ள கோழையை அகற்றி அமிர்தம் உண்ணவேண்டும். அது தேனைப் போல ஆயிரம் மடங்கு தித்திப்பைக் கொடுப்பது. ஆகாயத்தாமரையில் உள்ள இவ்வமுதத்தை வாசியோகத்தால் கறந்து சந்திர மண்டலம், ஆதித்த மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலத்திலும் கரைத்து தம் உடம்பில் தினந்தோறும் அளவுடன் சேர்க்கும் யோகிகள் நல்ல யோகிகளே!!!
 

******************************************* 

சிவவாக்கியம்-182 

முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார்
சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள்
அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே. 


முக்தியைப் பெற நினைத்து முனைந்து தியானம் புரிகின்ற போது ஆதி அந்தமாக முடிந்த ஆகாயத் தாமரையின் உச்சியில் அப்பனும், அம்மையும் பரிவுடன் நடனம் ஆடுவதை அறியலாம். இதனை தவம் முடித்த சித்தர்களும், ஞானிகளும் தனக்குள் நின்று பரம்பொருள் ஆடுவதையே தில்லையில் ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் நடந்த ஆட்டம் இதுவே என்பார்கள். இந்த வண்ணம் உடலில் நின்று ஆட்டுவிக்கும் அம்மை அப்பன் ஆட்டம் நின்று போனால் உயிர் பொய் உடம்பு ஆடிய ஆட்டம் எல்லாம் அடங்கிவிடும். ஆகவே இதனை நன்கு அறிந்துணர்ந்து நினைந்து தியானியுங்கள். 
******************************************* 

சிவவாக்கியம்-183 

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அநாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பருத்து நாட்டினால்
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே!!! 

சக்தியும் சிவனும் ஒன்றாகி இந்த உலகம் அனைத்திலும் ஒன்றான சிவமே எல்லாமாய் இருக்கின்றது. இதனை சக்தியாகிய உடலையும் சிவனாகிய உயிரையும் ஒன்றில் ஒன்றாக்கி ஒன்றி தியானித்து சிவம் ஆகிய மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். அன்றும் இன்றும் ஒன்றே தெய்வம். ஒருவனே தேவன். அவன் அனாதியாக என்றும் எப்போதும் நிலையான ஒன்றாக இருப்பவன். என்றும் இளமை மாறாமல் நின்ற செம்பொன்னம்பலத்தைக் கண்டு செம்பில் களிம்பருத்து பொன்னாக்குவது போல் நீங்கள் செய்த பாவங்கள் யாவையும் நீக்கி சோதியில் மனதை நாட்டி தியானித்தால் அப்போதே தெய்வம் உமக்குள்ளே இருப்பதை அறிவீர்கள். அது சிவம் என்று. (கன்றல் - இளமை) 
******************************************* 

சிவவாக்கியம்-184 

நட்ட தாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதங்களும்
கட்டி வைத்த புத்தகம் கடும்பிதற்று இதற்கெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறிந்தபின்!

மரம் நடுவது போன்ற புண்ணியச் செயல்களும், தர்ம சாஸ்திரங்கள் சொல்லும் உயர்ந்த பரம் பொருளும், ஹோமங்கள் செய்ய அமைத்த யோனி குண்டங்களும், வேள்வியில் ஓதுகின்ற நான்கு வேத மந்திரங்களும், மிகவும் முக்கியமான நூல்கள் என்று பாதுகாத்து வைக்கும் புத்தகங்களும், ஞானியர் உபதேசிக்கும் யோக ஞானங்களும், அது பெரியது இது பெரியது என செய்யும் வாதங்களும் ஆகிய இவைகள் யாவுமே என் உடம்பில் பொட்டாக விளங்கும் பிரம்மத்தையே போதிக்கின்றது என்பதையே என் பிரானாகிய ஈசனை அறிந்தபின் யான் தெளிந்து உணர்ந்து கொண்டேன்.

******************************************* 

சிவவாக்கியம்-185
 
வட்டமான கூட்டிலே வளர்ந்தெழுந்த அம்புலி
சட்டமீ படைத்திலே சங்கு சக்கரங்களாய்
விட்டது அஞ்சுவாசலில் கதவினால் அடைத்த பின்
முட்டையில் எழுந்த சீவன் விட்டவாறது எ
ங்ஙனே?

உடம்பாகிய கூட்டுக்குள்ளே வட்டமான பூரண நிலவாக வளர்ந்து எழுந்து நிற்கின்றது பிரமம். அதுவே இப்பூமியெங்கும் சங்கு சக்கரங்களாக திகழ்கின்றது. இதனை அறிந்து ஐம்புலன்களையும் அஞ்செழுத்தால் அடக்கி அண்டமாக விளங்கும் முட்டையில் எழுந்துள்ள உயிராகிய சீவனை சிவனுடன் சேருங்கள். இறவா நிலையடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் பெறலாம். 

******************************************* 
சிவவாக்கிய
ம்-186

கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!!!

கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது arivai வளக்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லுன் மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம்.
 

******************************************* 
சிவவாக்கிய
ம்-187 
 
நல்ல வெள்ளி ஆ
தாய் நயந்த செம்பு நாலதாய்
கொள்ளு நாகம் மூன்றதாய் கலாவு செம்பொன் இறந்ததாய்
வில்லின் ஓசை ஒன்றுடன் விளங்க ஊதா வல்லிரேல்
எல்லை ஒத்த சொதியானை எட்டு மாற்ற தாகுமே!!!

நல்ல வெள்ளி ஆறுபங்கும், செம்பு நாலு பங்கும், துத்தநாகம் மூன்று பங்கும், தங்கம் இரண்டு பங்கும் சேர்ந்து துருத்தி கொண்டு ஊத்தி உருக்கினால் அது எட்டு மாற்றுத் தங்கமாகும் என்று பொருள் கண்டு ஏமாந்தது போனவர்கள் அநேகர். நான்கு இதழ் கமலமான மூலாதாரத்தில் உள்ள குண்ட்டளினியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்த கரணங்களாலும் இணைத்து ஆனவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் நீக்கி, நம்முள் செம்பொன்னம்பலமாக விளங்கும் சோதியில் அகாரம், உகாரம் என்ற எட்டிரண்டால் வாசியை வில்லில் இருந்து அம்புவிடும் போது தோன்றும் 'ம்' என்ற ஓசை லயத்துடன் உண்மை விளங்கி ஊதா வல்லவர்கலானால் ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பாலாய் சோதியாய் நிற்கும் ஈசனிடம் சேரலாம். இப்படி யோக ஞான தியானம் செய்யும் சாதகர்களின் உடம்பு பொன் போல மின்னும். இது எல்லையில்லா அந்த பரம்பொருள் அருளால் ஆகும்.  

******************************************* 
சிவவாக்கிய
ம்-188

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில்
முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.  
******************************************* 
சிவவாக்கிய
ம்-189

உருவும் அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே.

மெய்ப்பொருள் என்பது உருவும் அல்ல, ஒளியும் அல்ல, உருவும் ஒளியும் சேர்ந்து ஒன்றாகி நிற்பதே ! அது மருவாக இருப்பதல்ல, வாசனைப் பொருந்திய மனமாக வீசுவதல்ல, சுழுமுனை எண்டும் நாடியில் ஓடுவதல்ல. பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல, பேசுகின்ற ஆவியும் அல்ல. யாதுக்கும் நடுவாக இருந்து அறிவதற்கு அரியதாகி நிற்பதால் அந்த மெய்ப் பொருளை அறிந்து அதன் பெருமையை உணர்ந்து தியானித்து சோதியான ஈசனை யாவர் காண வல்லவர்கள். 

******************************************* 

சிவவாக்கிய
ம்-190

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை\
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!

பிரம்மமே ஒரேழுத்து அட்சரமாக உதித்து உலகமெல்லாம் நின்று உடம்பாகியது. அதில் ஈரேழுத்தாக இயங்கும் ஒலியையும் ஒளியையும் அறிந்து அகார உகார அட்சரத்தின் உண்மையை உணர்ந்து வாசி எனும் யோக ஞானத்தால் இறை இன்பத்தை அடையும் வழியை அறியாமல் இருக்கின்றீர்கள். மூவெழுத்தான அகார, உகார, மகாரம் எனும் ஓங்காரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவராக மூண்டெழுந்த சிவத்தை நாள் தோறும் அதிகாலையில் எழுந்து மனம் மொழி மெய்யால் 'ஓம் சிவயநம' என உச்சரித்து நினைவால் நினைந்து தியானம் செய்யுங்கள்.
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment