Sunday, June 16, 2013

சிவவாக்கியம் (191-200)

சிவவாக்கியம் (191-200)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!
அறிந்தால் வாழ்வும் நன்றே
******************************************* 
சிவவாக்கியம்-191

ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாம் 
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் 
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் 

ஆதி அந்த மூல விந்து நாதம் சிவாயமே!!!


ஆதியான தோற்றத்திற்கும் அந்தமான முடிவிற்கும் மூலமாக இருப்பது விந்து நாதம். அதுவே ஐந்து பூதங்களாகவும் விரிந்து ஐந்து எழுத்தாகவும் அமைந்தது. அந்த நாத விந்தே ஒளியாகவும், ஒலியாகவும் நம் உடலில் மேவி நிற்கின்றது. ஆதியாகவும், அந்தமாகவும், நாதமாகவும், சிவனாகவும், சக்தியாகவும், ஒலியாகவும், ஒளியாகவும் உள்ளவை யாவுமே சிவம் என்ற பரம் பொருளால் ஆனதே!!!
 
******************************************* 

சிவவாக்கியம்-192

அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார்
வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!!

அரும்பசிக்கு அன்னதானம் செய்தவர்கள் கோடி வளம் பெற்று பல்லாண்டு காலம் வாழவேண்டும். அன்னதானம் செய்வதற்கு பொருள் வேண்டி செல்வந்தர்களிடம் சென்று உதவி கேட்டால் அவர்கள் அதிகாரம் செய்து இல்லை என்று விரட்டலாம். அன்னதானம் செய்வதை குற்றம் என்று சொல்லி வில்லங்கம் செய்பவர்கள் பாழும் நரகக் குழியில் வீழ்ந்து அல்லலுறுவார்கள். அனைத்து உயிரிலும் ஆண்டவன் இருப்பதை அறிந்து அவனைத் தனக்குள்ளேயே கண்டு கள்வர்கள் கன்னமிடுவதைப் போல் யோக ஞான சாதனத்தால் தியானிப்பவரால் பத்தாம் வாசலைக் கடந்து கடவுளை அடைவது நிச்சயம்.
******************************************* 
சிவவாக்கியம்-193 

ஒதொணாமல் நின்ற நீர் உறக்கம் ஊனும் அற்ற நீர்
சாதி பேதம் அற்ற நீர் சங்கையின்றி நின்ற நீர்
kothilaatha அறிவிலே குறிப்புணர்ந்து நின்ற நீர்
ஏதும் இன்றி நின்ற நீர் இயன்குமாறது எங்
னே !

ஓதாது உணரும் ஒரேழுத்தாக நின்றது நீர். உறக்கம் என்பதோ, உணவு என்பதோ அற்று நிற்பது நீர். சாதி பேதம் அற்று சகலரும் ஒன்றாக உள்ளது நீர். சங்கோசமில்லாமல் நிர்வாணமாக நிற்பது நீர். குற்றமேதுமில்லாத அறிவாகவும் ஆயுளின் குறிப்பையும் உணர்ந்து நிற்பது நீர். இப்படி யாவும் எனக்குள்ளே நீராக நின்று இயங்குவது ஈசா உன் செயலே!! (சங்கை =வெட்கம்)  
******************************************* 
சிவவாக்கியம்-194 

பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும்
பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றது என்ன ஈசனே!!!

பிறந்தபோதே கோவணமும் பூணூலும் குடுமியும் கூடவே பிறக்கின்றதா? பிறக்கும் பொது இறைவனைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவது இல்லை என்பதை மறந்துவிட்டு வெறும் சடங்குகளை எல்லாம் குரங்குப் பிடியாக பிடித்துக் கொண்டு அதிலேயே மனம் வைத்து ஈசனை அறியாமல் இருக்கின்றார்கள். நான்கு வேதங்களும் மனதினுள்ளே உதித்ததா? அறிவிலே உதித்ததா? பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற சர்ச்சையில் எச்சன் நிலத்துக்கும் வானுக்கும் லிங்கோத்பவராக நின்று தானே அநாதி என நிரூபித்ததை அறிந்து அவ்வீசனை உங்களுக்குள் உணர்ந்து அவனை ஆயா தவம் செய்ய முயலுங்கள்.
 
******************************************* 
சிவவாக்கியம்-195 

துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித்திகழ ஊதா வல்லிரேல்
பெருத்ததூ
ண் இலன்கியே பிழம்பதாய் விரிந்திடும்
திருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே !

நாம் விடும் மூச்சில் வாசியைக் கண்டு அதனை யோகமாக்கி செய்ய உடம்பு உண்டு. அதில் உள்ள ஆன்மாவில் பொன்னார் மேனியாகிய ஈசன் விளங்கும் சோதி உண்டு. இந்த வாசி யோகத்தை தினமும் முறை பிசகாமல் மனதில் நிறுத்தி இறைவனை எண்ணி ஊத ஊத மனம் இலயமாகி பெருத்த தூணாக மறைக்கும் நந்தி விலகி நெருப்பாறு ஒளிபிழம்பாக விரிந்து நிற்கும். அங்கு மயிர்பாலம் எனும் பிரம்மாந்திரத்தில் ஏறிக் கடந்தால் கோடி சூரியப் பிரகாசமான சோதியில் சிவனும் சீவனுமின்றி வேறு எதுவுமில்லை. நீயே அந்த பரம்பொருள் என்பதை உணர்ந்து யோக தியானமும் செய்து ஈசனைச் சேருங்கள்.  

******************************************* 
சிவவாக்கியம்-196 


வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடி வைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூஜை பூசை என்ன பூசையே!!

ஆசாரமாக வேடம் போட்டு ருத்திராட்சம் ஸ்படிகம் போன்ற மணிகளால் ஆன மாலைகளைக் கழுத்தில் போட்டு மணியோசையுடன் இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டுகின்றீர்கள். ஆட்டை அறுத்துக் கூறுபோட்டு விற்பவர்கள் போல சடங்குகள் பண்ணுகின்றீர்கள். தேடிக் கொணர்ந்து வைத்து செம்புகளில் நீர் நிரப்பி அதனை அங்கு திரளாகப் பரப்பி பூக்களால் அர்ச்சித்து செய்வதாக போடும் பூசை என்ன பூசையோ. உயிரை வளர்க்க செய்யும் பூசையை அறியாமல் வயிறை வளர்க்க செய்யும் பூசை என்ன பூசையோ?
******************************************* 
சிவவாக்கியம்-197 

 
முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!!

தாயின் கருவிலே தூமையினால் உருவாக்கி பிறந்த உயிரானது உடலாகி வளர்ந்துள்ளது. உடம்பிலே நாத விந்தாக ஒன்று சேர்ந்து இலிங்கமாக கட்டிக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றது. அதனை அறிந்து கொண்டு எதனுடனும் முட்டாமலும், கட்டாமலும், ஒட்டாமலும் தனித்திருக்கும் முடிவாக நின்ற ஈசனை உணர்ந்து மனதை அங்கேயே இருத்தி அதையும் கடந்து சென்று நினைவு, உணர்வு, அறிவு என மூன்றையும் ஒன்றாக்கி தியானம் செய்ய வல்லவர்கள் தனக்குள் நின்ற நாதனான ஈசனைக் கண்டு அருள் பெறுவார்கள். அவ்வீசன் நின்ற இடமே கைலாயம். அது உனக்குள்ளேயே எட்டு திசைகளாகவும், நான்கு வேத கைகளாக இருக்கும் இடமே ஈசன் வாழும் வீடாகும்.
******************************************* 
சிவவாக்கியம்-198 
அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே
இருக்க வல்ல பேராலோ இனிப்பிறப்பது இல்லையே!

சூரியக்கலை, சந்திரக்கலை எனும் பிராணயாமத்திற்கு அப்பால் சுழுமுனை எனும் அக்னிக் கலையால் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை முதுகுத்தண்டின் வழியாக வாசியை மேலேற்றும் நேர்மையை உள்ளுணர்ந்து செய்ய வேண்டும்.
வாசி ஒடுங்கும் ஓர் எழுத்தாக உனக்குள் இருக்கும் பிரம்மத்தில் சேர்க்க வேண்டும். அந்த ஓர் எழுத்து உனக்குள் ஒப்பற்ற வெளியாக இருப்பதை உணர்ந்து வாசியோகம் செய்து தியானத்தில் இருக்கும் உத்தம யோக ஞானிகள் இறவா நிலைப் பெற்று இறைவனுடன் சேர்ந்து இனி இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டார்கள்.
******************************************* 
சிவவாக்கியம்-199 

மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர்
ஞான வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!!

மூலவட்டம் எனும் பிரம்மத்திலிருந்து தோன்றிய பஞ்ச பூதங்கள் உடலாகிய கோலத்தில் மூன்று வட்டங்களாகி சூரிய, சந்திர, அக்னி மண்டலங்களாக உயிராகி நீராக நின்றது. அது இவ்வுலகம் முழுமையும் சொல்லுகின்ற ஞானமாக உனக்குள்ளேயே புருவமத்தி எனும் மன்றினுள் ஏகமாகி ஒரேழுத்தாக இருந்தது சிவமாகிய மெய்ப்பொருளே. இதனை ஞானிகளின் போதனையால் அறிந்து யோக ஞான சாதகத்தால் 'சிவயநம'' என்று தியானியுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-200


சுக்கிலத் திசையுளே சுரோணிதத்தின் வாசலுள்
முச்சதுரம் எட்டு
ளே மூலாதார வரையிலே
அச்சமற்ற சவ்வுளே அரி அரண் அயனுமாய்
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே!!

சுக்கில சுரோணித கலப்பால் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் உருவாகி தோன்றிய எண்சான் உடம்பினுள், மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை சகஸ்ராரதளத்தில் கொண்டு சேருங்கள். அச்சமற்ற வாசியை தொண்டை சவ்விலே வைத்து ஊதி உண்ணாக்கின் வழியாக மேலேற்றுங்கள் . அங்கெ வெட்டவெளியாக விஷ்ணு, சிவன், பிரம்மா என மூவரும் ஒன்றாக அமர்ந்துள்ளார்கள். அதனை அறிந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்ந்து மூலாதாரத்திலிருந்து அஞ்ஞா வரை ஆறு ஆதாரச் சக்கரங்களையும் கடந்து சகஸ்ரார தளத்தில் சேர்க்க உச்சரிக்க வேண்டிய மந்திரம் சத்தியமாக விளங்கும் 'ஓம் நமசிவாயமே' 
*******************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம் !!!

No comments:

Post a Comment