Monday, May 13, 2013

சிவவாக்கியம் (021–030)


 
சித்தர் சிவவாக்கியர்.  
ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!  
*****************************************
சிவவாக்கியம் -021

சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம்.
*****************************************
சிவவாக்கியம் -022

தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்
செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே
விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே.


தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது. அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள். இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது. நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள்.
*****************************************
சிவவாக்கியம் -023

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.


ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள். நமசிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால் அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான்.
*****************************************
சிவவாக்கியம் -024

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே


அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது. அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது. இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது? அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை. அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.
*****************************************
சிவவாக்கியம் -025

நீளவீடு கட்டுநீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழ வேணு மேன்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்த போது கையன்கன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே


தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!!!!
*****************************************
சிவவாக்கியம் -026

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யினோடுபொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டீர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விளை பெறாது காண் இவ்வுடலமே.


மெய்யாகிய வீட்டை அறியாது பொய்யான வாழ்வை நம்பி, புது வீட்டைக் கட்டி வேள்விகள், செய்து புது மனை புகுவிழா நடத்தி, மாடு மக்கள் மனைவி சொந்தம் பந்தம் என அனைவரோடும் எப்போதும் இப்படியே இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! நல்லது கேட்டது என்பதை நடுவாக இருந்து தீர்ப்பளிக்கும் இறைவனின் இறுதி ஓலை எமன் கையில் கிடைத்து இவ்வுயிரை கொண்டு போனால் மண்ணால் செய்த ஓடு பெரும் விலை கூட பெறாது ஒரு காசுக்கும் உதவாது இவ்வுடம்பு என்பதனைக் கண்டு அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலின் இவ்வுடலில் ஈசன் இருக்கும்போதே அவனை உங்களில் கண்டுணர்ந்து தியானியுங்கள்.
*****************************************
சிவவாக்கியம் -027

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே


ஒடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர்போய் ஆகாயத்தில் மறைந்து விட்டால் அப்போது இவ்வுடலில் ஆடிக் கொண்டிருந்த உயிரும் இல்லை. அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனும் இல்லை என்றாகி தம மனைவி மக்களோ, சொந்த பந்தங்களோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள். பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேரலாம்.
*****************************************
சிவவாக்கியம் -028

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே


நம் ஆருயிரில் ஆதி, அனாதி அந்தமாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்கும் முன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆன, பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும்,விண்ணில் சேரும் தேவர்களாகவும் அனைவரும் வந்தனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
*****************************************
சிவவாக்கியம் -029

பண்டுநான் பறித்து எறிந்த பன்மலர்களை எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?


தன் வாழ் நாளில் முன்பு வீணாய்ப் பறித்து எறிந்த பன்வகை மலர்கள் எத்தனையோ? மற்றவரை பாழாக்குவதற்கு செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனையோ? இளைஞனாய் திமிரெடுத்து திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனையோ? இம்மாதிரி செய்ய தகாதவைகளை செய்து இதனால் ஏற்பட்ட பாவங்கள் அகல சுற்றி வந்த சிவாலயங்கள் எத்தனையோ என்பதை உணர்ந்தறியுங்கள்.
*****************************************
சிவவாக்கியம் -030

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டரிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ?
விண்டவேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கைஎடுப்பது இல்லையே


அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், அலைந்த அனுபவங்களையும், அலைந்து தேடியதையும் யாராவது அறிய முடியுமா? வேதங்கள் வெளிப்படுத்தும் மெய்ப் பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனைக் கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள் காணுகின்ற கோயில்களில் எல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள்.
*****************************************
மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே! சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைகளான 550 பாடல்கள் மற்றும் பாட்டுச் சித்தரின் விளக்கங்களுடனும் காண வேண்டி.
http://sivavakiyar.blogspot.com நண்பர்களே! இணைப்பினை சொடுக்கி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை மேற்கண்ட வலைப்பூவில் இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்!!! மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக மலர வாழ்த்துக்கள்...அன்புடன் கே எம் தர்மா..



5 comments:

  1. சிவா வாக்கியரின் பாடல்களும் அதற்கான விளக்கங்களும் அருமை... படித்தேன்.ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி இனிய நண்பரே! ஜெயச்சர் அவர்களே! பதிவுகள் தொடருகின்றன. சிவவாக்கியரின் சிந்தனைப் பாடல்கள் மொத்தம் 550 ஆகும். இவைகளுக்கு திரு பாட்டுச் சித்தர் நாராயணன் அவர்களின் விளக்கங்களும் பதிவிற்கு பத்துப் பாடல்களாகத் தொடருகின்றன. மேலும் இப்பாடல்களை இனிய தமிழில் http://sivavakiyar.blogspot.com இணையத்தில் உள்ள ஒலிப் பேழையில் கேட்டு மகிழலாம்!! மேலும் சில வலைபூவினை தங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன்.

      திருவள்ளுவரும் திருக்குறளும் என்னும் வலைப்பூவில் 1330 குறட்பாக்களும் இனிய இசையில் விளக்கங்களுடன் கேட்டு மகிழவும், டாக்டர் திரு. ஜி.யு.போப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பும், விளக்கங்களுடன் படித்து மகிழவும் இணைப்பினைச் சொடுக்குக. http://tiruvalluvar-tirukkural.blogspot.in/2012/10/1330.html

      திருமூலரும் திருமந்திரமும் என்னும் வலைப்பூவில் - பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார். 3000 பாடல்களும் http://thirumoolar-andkm.blogspot.in/ படித்து மகிழ்வும் வேண்டுகின்றேன். தங்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும்.

      Delete
  2. பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் பதிவுகள் எளிதாக உள்ளது.வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! மேன்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  3. நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் -

    ReplyDelete
  4. என்னைப் போன்ற பாமரர்களும் அறியும் வண்ணம் சிவவாக்கியத்தின் பொருளை சிறப்பாக உரைத்தீர் நன்றி ஐயா..நன்றி...

    ReplyDelete