Friday, May 10, 2013

சித்தர் சிவ வாக்கியர் சரிதம்-பாகம்-3

 
சித்தர் சிவவாக்கியர் & திருமழிசையாழ்வார். 

ஆதியே துணைஓம் நமசிவய சிவாய நம ஓம்


சிவ வாக்கியர் :

சித்தர் சிவ வாக்கியர் சரிதம்-பாகம்-3



குவா குவா என்று எட்டிரண்டுக்குப் பதிலாக, சிவா, சிவா என்று அழுகுரலோடு பிறந்த சிவவாக்கியர் ஆதியிலிருந்தே ஞான தாகம் கொண்டு ஊர் ஊராக, காடு மலை வனாந்திரம் என்று அலைந்து , கரையாத காக்கையையும், கவுளி சொல்லாத  பல்லியையும், வட்டமிடாத கருடனையும், நாறாத பிணத்தையும், மனக்காத பூவையும், இப்புவியின் மையப் பகுதியாகவும், ஆணி வேறாகவும் அமைந்த புண்ணிய பூமியாம் காசி மாநகரில், ஸ்ரீ ஹரி நாராயனரே ராமன் என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வந்து சிவவாக்கி யருக்கு தவ மற்றும் ஞான மார்க்கத்தினை தீட்ச்சை வழங்கி அருளினார். அக்குருவின் கட்டளைப் படியே இல்லற தர்மத்தை முடிக்க தர்ம பத்தினியாம், ஒரு நற்குண குறமாதினை மணந்து இல்வாழ்வையும், தவ மற்றும் யோக மார்க்க வாழ்வினையும் தனது இரு கண்களைப் போன்று கடைப் பிடித்து மிகப் பெரும் சித்தராக, தனது மனதையும், உடலையும் காய கல்பமாக வளர்த்துக் கொண்டார். இதனை அறிந்த ரசவாத வித்தையில் சித்தி பெற்று சிறந்தவரான கொங்கணச் சித்தர் இவரை சந்தித்து ஆத்ம நண்பரானார்.
சீர்காழியில் தவம் புரிந்து வாழ்ந்திருந்த சட்டை முனிநாத சித்தரைக் காண ஆர்வம் கொண்டு ககன மார்க்கத்தில் வந்து அவரைச் சந்தித்து சத்சங்கம் செய்தனர். பின் மூவரும் ஒன்று சேர்ந்து சதுரகிரி சுந்தர மாகாலிங்க மலைக்குச் சென்று தவம் செய்தனர். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் தொண்டும் மகேசன் தொண்டும் செய்து கொண்டிருந்தனர். சதுரகிரியில் தவம் செய்யும் பதினெண் சித்தர்களையும் தரிசித்து அவர்களுடன் ஒன்றாகக் கலந்தனர். பின் பொதிகை மலை, கொல்லிமலை, கயிலைமலை போன்ற இடங்களுக்குச் சென்று இறை தரிசனம் பெற்றனர்.

கொங்கன சித்தர் கலியின் கொடுமைகளுக்கு மக்கள் ஆளாவதைக் கண்டு மனம் பொறாமல், திருப்பதி மலைக்குத் திரும்பினார். கலி முடியும் வரை கல்ப கோடி காலம் ஜீவசாமாதியில் இருந்து, இறையை வேண்டுவோர்களுக்கு அருளும், பொருளும் கிடைக்க வழிவகை செய்து திருப்பதியில் சாமாதியில் ஐக்கியமாகி இருந்து வருகின்றார். சிவவாக்கியரும், சட்டை முனி நாத சித்தரும் மக்களின் அறியாமை அகலவும், எல்லோரும் இன்புன்றிருக்கவும், மரணமில்லா பெரு வாழ்வை பெறவும் பல பாடல்களை இயற்றி பாடி வந்தனர்.

மீண்டும் சீர்காழிக்குத் திரும்பிய சட்டைமுனிநாத சித்தரும், சிவவாக்கியரும் ஈசனுக்குரிய சேவைகள் யாவையும் செய்து முடித்தனர். பின் இருவரும் ஈசனோடு ஐக்கியமாகும் எண்ணங்கொண்டு அதற்கான தவ முயற்சியில் ஈடுபட முடிவெடுத்தனர். சிவவாக்கியர் திருமழிசை என்ற ஊரிலும், சட்டைமுனி நாத சித்தர் சீர்காழியிலும் கடுமையான தவம் பூண்டு கல்பதேகமான தங்கள் உடம்பை சமாதியிலேயே இருந்து பரிசுத்த ஆன்ம ஜோதியோடு, ஈசனோடு கலக்க சிவலோகம் புகுந்தனர். அங்கே பரம்பொருளாகிய ஈசன், இவர்களின் ஆன்மாக்களைத் தடுத்து நிறுத்தி நீங்கள் இருவரும் இப்பூவுலகில் ஆற்ற வேண்டிய பணிகள் நிரம்ப இருக்கின்றது, பக்தி ஞானத்தை வளர்க்கவும், இறை சக்தியை நிலை நிறுத்தவும் நீங்கள் மீண்டும் மண்ணில் பிறந்து அதனை செய்து முடித்து என்னைச் சேருங்கள் என கட்டளையிட்டார். ஈசன் ஆணையின் வண்ணம் சட்டைமுனி நாத சித்தர் " ஸ்ரீ இராமானுஜராகவும்", சிவவாக்கிய சித்தர் "ஸ்ரீ திருமழிசை ஆழ்வாராகவும்" மீண்டும் இப்பூமியில் அவதரித்தனர்.

திருமழிசையாழ்வார்:

திருமழிசையில் கடுந்தவம் புரிந்துவந்த பார்கவர் என்ற முனிவர், விதிவசத்தால் கனகாங்கி என்ற தேவமத்தின் மீது மையல் கொண்டு ஆவலுடன் கூடிக் கலந்தார். அதன் விளைவாக அவரது பிரம்மச்சரிய விரதம் வீணாகி போன வேதனையில், அவளை பிரிய கருவுற்ற கனகாங்கி, உருப்பெறாத பிண்டம் சிசுவாகப் பிறக்க, அதனை வெறுத்து அங்கிருந்த பிரம்பு புதரில் வீசி எறிந்துவிட்டு விண்ணுலகம் சென்றாள். ஈசனின் கட்டளையின் படி தனது ஆன்மாவை அத்தேவமாது வீசி எறிந்த பிண்டத்திலுள் புகுத்தி கொண்டார் சித்தர் சிவவாக்கியர். திருமாலின் அருளால் அக்கரு உயிர்பெற்று ஒரு சிறந்த ஆண் குழந்தையாக உருவாகியது.

மறுநாள் அங்கே பிரம்பறுக்க வந்த, திருமால் பக்தனாகிய, குழந்தை பேறில்லாத,   வேளாளன் என்ற  திருவாளன் என்பவர், ராம ராம என்று அழுதுகொண்டிருக்கும் அக்குழந்தையை, திருமாலின் வரப்பிரசாதமாக எண்ணி வீட்டிற்கு கொண்டுவந்து, சீராட்டி, பாலூட்டி, திருமழிசையான் என்ற பெயருமிட்டு வளர்த்தார்.  திருமழிசையான் அருந்தி மீதமிருந்த பாலை அருந்திய காரணத்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்று, கணிகண்ணன் என்ற ஆண் மகவை பெற்று இரு குழந்தைகளையும் இரு கண்களைப் போல பாதுகாத்து வளர்த்து வந்தனர்.  முன்பே செய்திருந்த தவப்பயன் தொடர்பால் தனக்கு முன்பு குருவாக வந்தவன் ஸ்ரீமன் நாராயணனே என்றுணர்ந்து, திருமால் புகழ் பாடி ஆழ்வாரானார். இவ்விதம் சிவவாக்கியர் திருமழியானாக தவாக்னியாக, மாறியதால் ஈர்க்கப்பட்ட முதலாழ் வார்களில் ஒருவரான பேயாழ்வார், திருமழிசையாரைச் சந்தித்து ஞான உபதேசம் கொடுத்து, திருமழிசை ஆழ்வாராக்கினார். ஈசன் இவரின் ஹரி பக்தியைக் கண்டு வியந்து 'பக்திசாரர்' என திருநாமமிட்டு வாழ்த்தி மறைந்தார்.

மேலும் தனது தவ வலிமையால் மாய மந்திரக்காரனாகிய சுக்திஹாரன் என்பவனை வென்று, அவனின் அகந்தையை அழித்து ஓடச் செய்தார். கனிகண்ணனும் இவரையே தனது குருவாகக் கொண்டு குரு சேவை செய்தார். தனிமையில், குகையில் தவம் செய்து கொண்டிருந்த திருமழிசை ஆழ்வாரின் தவப் பேரொளியை, அவ்வழியே தேசாந்திரம் வந்த முதலாழ்வார்கள், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் திருமழிசை ஆழ்வாருடன், பேயாழ்வாரின் அவதாரத்தலமான திருமயிலையில் தங்கி திருமாலின் பெருமையையும், பக்தியையும் பரப்பினர்.  முதலாழ்வார்கள் மூவரும் திருத்தல பயணம் சென்றபின்னர், திருமழிசையாழ்வார், திருமழிசை திரும்பி பல்லாண்டு வாழ்ந்திருந்தார். 
===============================================

மேலும் பயணிப்போம் இனிய நட்புக்களே! சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளைக் அவரின் 550 பாடல்கள் மற்றும் விளக்கங்களுடனும் காண வேண்டி.

1 comment:

  1. இது ஒரு பொக்கிஷம்.சிவவாக்கியர் சிவபக்தனாக இருந்து திருமழிசை ஆழவார் ஆனார் என்பதையே பலர் மறுப்பார். ஏனெனில் சித்தர்கள் பற்றிய அறிய தகவல்கள் இருந்தும் அதை யாரும் தெய்வீக புத்தகமாக அங்கீகரிக்கவில்லை/ ஒப்புக் கொள்ளவில்லை. சிலர் சித்தர்பாடல்களை நாஸ்தீகவாதம் என பேசுகின்றனர். சித்தர்கள் யாவரும் Evolved souls.இதை எல்லோருக்கும் பயன்படும் வகையில்ம் அளித்த உங்களை சித்தர்கள் பார்த்துக் கொள்வர்
    பாலா

    ReplyDelete