Tuesday, May 14, 2013

சிவவாக்கியம் (041-050)

சிவவாக்கியம் (041-050)

சித்தர் சிவ வாக்கியர் & திருமழிசையாழ்வார்
அரியும் சிவனும் ஒன்றே!!!

அறிந்தால் வாழ்வும் நன்றே

சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 041 
 
வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்பு சொல் வேதமெனப் படக் கடவதோ 
வாயில் எச்சில் போக வென்று நீர்தனைக் குடிப்பீர்காள் 
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே
 
மற்றவர் வாய் வைத்த நீரை எச்சில் என்று சொல்லி கீழே கொட்டுகின்றீர்களே! உங்கள் வாயால் எச்சிலோடு கலந்து சொல்லும் வார்த்தைகளை மட்டும் வேதம் என்கின்றீர்கள் வாயில் உள்ள எச்சில் போக அவ்வாயினால்தான் நீரைக் குடிக்கின்றீர்கள். வாயில் உள்ள எச்சிலும் நீர்தான். ஆதலால் வாயில் உள்ள எச்சில் எவ்வாறு எவ்வண்ணம் போனது என்பதை எனக்கு வந்திருந்து சொல்லுங்கள்.
****************************************
 சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 042 
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் 
போதகங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.

வாயினால் ஓதுகின்ற வேதம், மந்திரங்களாக உள்ளவை, உண்ணும் உணவு, ஏழு உலகங்கள், பெண்களிடம் விட்ட விந்து, அறிவு, சப்தங்கள் யாவுமே எச்சில்தான், ஆகவே அனைத்திலும் நீராகிய எச்சிலால் ஆனது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீரில்லாமல் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 043
பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்கனே
பிறந்து மண்ணிறந்து போய் இருக்குமாற தெங்கனே
குறித்துநீர் சொல்லாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவி இரண்டும் அஞ்செழுத்து வாளினால்.

பிறப்பதற்கு முன்பு நாம் எங்கிருந்தோம், பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்தபின் எங்கே போய் இருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள். .இப்பிறவியின்மேன்மையை உணராமல் எந்த இலட்சியமும் இல்லாமல் மறைந்து போகும் மானிடர்களே! உங்கள் பிறவியை அறுக்கவும், மீண்டும் பிறவாமல் இருக்கவும் அஞ்செழுத்து என்றும் பஞ்சாட்சர மந்திரத்தை உங்கள் காதுகளில் ஓதுகின்றேன்.
****************************************
  சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 044
 
அம்பலத்தை அம்பு கொண்டு அசங்கேன்றால் அசையுமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ
செம்பொன் அம்பலத்துலே தெளிந்த்ததே சிவாயமே.

அம்பலமாய் இருக்கின்ற ஆகாயத்தை அம்பைவிட்டு அசை என்றால் அசையுமா? கலங்கம் இல்லாத திருப்பாற்கடலை கலங்க முயன்றால் கலங்குமா? அதுபோல் உலக இன்பங்களைத் துறந்து செவ்வனே யோக, தியானம் பயின்று வந்த யோகிகளிடம் துன்பமாகிய இருள் கிட்டே அணுகுமா? செம்மையான பொன்னம்பலத்தில் சோதியாக விளங்கும் சிவனை அறிந்து தெளிந்து "சிவாய நம" என தியானம் செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை 045
 
சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே
சத்தி ஏது சம்பு ஏது சாதி ஏது பேதம் அற்ற தேது
முத்து ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது
வித்தில்லாத விதத்திலே இன்னதென்று இயம்புமே.

சித்தரென்றும் அவதாரமென்றும் சொல்லித் திரியும் ஞானிகளே! சித்தம் என்று சொல்லுமிடம் ஏது? சிந்தனை எங்கு தோன்றுகிறது? சீவனாகிய உயிர் எங்குள்ளது? சத்தியாகிய வாலை இருப்பிடம் எது? சம்பு எனப்படும் ஈசன் உலாவும் இடம் எது? சாதி பேதம் இல்லாதது எது? முத்தியை அழிப்பது எது? உடம்புயிருக்கு மூலம் எது? மூல மந்திரமான ஒரேழுத்து எது என்பதையெல்லாம் அறிவீர்களா? வித்தே இல்லாமல் வித்தாக என்றும் நித்தியமாய் விளங்கும் உளதாய், இலதாய் உள்ள பொருளை இதுதான் அது என்று விளக்கமாக இயம்புங்கள் 
****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை - 046
 
சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்று நன்
முத்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
வித்தை இத்தை ஈன்ற விதத்தில் விளைந்ததே சிவாயமே.

தியான நிலையில் சித்தத்தையும், சிந்தையையும், சீவனையும் அறிந்து அது நின்ற இடத்தில் மனதை நிறுத்த வேண்டும். அங்கு வாலையாகிய சக்தியையும் அறிவாகிய சிவனையும் சாதி பேதம் ஏதும் இன்றி இரண்டும் ஒன்றான மெய்ப்பொருளில் சேர்க்கவேண்டும். அதுவே முக்திக்கு வித்தாகும். இந்த ஓரெழுத்தை மேலே ஏற்றி ஆறு ஆதாரங்களையும் கடந்து, சகஸ்ரதளத்தில் சேர்க்க வாசியென்ற யோக வித்தையை அறிந்து பயிற்சி செய்ய வேண்டும். ஞான வித்தையான பிரமமான ஒரெழுத்தெனும் விதத்தில்தான் அஞ்செழுத்தும் விளைந்து பஞ்சபூதங்களாய் விரிந்து நிற்கிறது.
****************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள் - 047
 
சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.

ஆண், பெண் என்பது தானே சாதி, இதில் பல சாதிகள் ஏதப்பா? இவ்வுலகம் முழுமையும் நீர்தான் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது. உடம்பில் பத்தாம் வாசலாகவும், பஞ்சபூதமாகவும், பஞ்சாட்சரமாகவ்வும் உள்ள பொருள் ஒன்றே. அது நகைகளில் காதில் அணியும் தோதாகவும், மூக்கில் அணியும் மூக்குத்தியாகவும், கைகளில் அணியும் வளையல் போன்ற பல வகையாகவும் இருப்பது தங்கம் ஒன்றே. இதை அறியாமல் எல்லா உயிர்களும் இறைவனிடம் இருந்து வந்ததை உணராமல் சாதி, பேதம் பேசுகின்ற உங்களின் தன்மைகளை என்னவென்று கூறுவேன்!!!!
****************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் - 048
 
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
இறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! 

பசுவின் மடியில் இருந்து கறந்த பால் மீண்டும் பசுவின்முலைக் காம்புகளில் சேராது,  மோரிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகாது. உடைந்து போன சங்கிலிருந்து ஓசை வராது, அதிலிருந்து வெளிவரும் உயிர் மீண்டும் அவ்வுடலாகிய சங்கில் புகாது. விரிந்த பூ மொட்டாகாது. மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் ஓட்ட முடியாது. அது போல்தான் நம் உடம்பை விட்டு உயிர்போய் விட்டால் மீண்டும் அவ்வுடம்பில் சேர்ந்து பிழைக்க வைக்க முடியவே முடியாது. ஆகவே உடம்பில் உயிர் உலாவிக் கொண்டிருக்கும்போதே யோக தியானம் செய்து இறைவனை அடைந்து பிறவா நிலை அடையுங்கள்.

****************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள - 049
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 
 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு, அவர்கள் குளிக்கும் அறையில் குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு, இறந்தால் தீட்டு என்று சொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

****************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்050 - 
தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமை போனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கி வந்து அநேகவேதம் ஒதுரீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. 

தீட்டாகிவிட்டதே, தூமையாகிவிட்டதே என்று சொல்லி துவண்டு வருந்தி அலையும் ஏழைகளே! தூமையான வாலைப்பெண் உனக்குள்ளேயே இருக்கும்போது தீட்டு என்பது உன்னைவிட்டு எவ்விடம் போகும். அதுபோனால் உனது உயிரும் உடலை விட்டு போய்விடும். ஆமையைப் போல் நீரில் தலையை மூழ்கிவிட்டு, தீட்டு போய்விட்டதாகக் கூறி அனேகவித வேத மந்திரங்களை ஒதுகின்றீர்கள். அந்த வேத சாஸ்திரங்களை உங்களுக்குச் சொல்லித் தந்த சொற்குருக்களும் இந்த தூமையினால்தான் உருவாக்கி வளர்ந்து திரண்டுருண்டு ஆனவர்கள்தான் என்பதனை அறிந்துருங்கள்.
****************************************
http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள்.  மனதிற்கு மகிழ்வாக இருக்கும். இந்நாள் இனிய பொன் நாளாக  மலர வாழ்த்துக்கள்.
மேலும் பயணிப்போம் சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகளை தொடர்ந்து...அன்புடன் கே எம் தர்மா.

ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

5 comments:

  1. நன்றி

    ReplyDelete
  2. Super. Thank you so much. Searched for this everywhere.

    ReplyDelete
  3. மகான் சிவவாக்கியரின் மலரடிகளை மனம் மொழி மெய்யால் வணங்குகிறேன்

    ReplyDelete
  4. வொக்கால ஒலி

    ReplyDelete